ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும். காஞ்சி மகாபெரியவர் மடத்தில் வாழ்ந்த காலத்தில், ஆடிவெள்ளியன்று பெரியவரே முன் நின்று திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்வார். அப்போது பக்தர்கள் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், துர்க்காஷ்டகம், தேவி மகாத்மியம் போன்ற பாடல்களை இசையுடன் பாடுவர். அப்போது பெரியவரும் சேர்ந்து பாடுவது காண்போரைப் பரவசப்படுத்தும் அரிய காட்சி. பூஜை முடிந்ததும், ஆடி மாத அம்பிகை வழிபாடு குறித்த விஷயங்களை பெரியவர் எடுத்துரைப்பார்.வீடோ, துணியோ, உடம்போ அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு சாட்சாத் பராசக்தியும், பரமேஸ்வர பத்தினியுமான அம்பாளுடைய சரணாவிந்த தியானம் தான் வழி. அம்பாளின் திருவடிகளை தியானித்தால், குறையெல்லாம் தீர்ந்து பூர்ணமாக அப்படியே நிரம்பிப் போய் விடுவோம். அதே நேரம், நாம் அழுக்காக பிறந்துள்ளதும் அவளது விளையாட்டு தான். எனவே, இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக பூர்ணமாகப் பண்ணுவதும் அவள் தான். அம்பாளின் தியானத்தை விட வேறு ஏதும் வேண்டியதே இல்லை. அவளது அருளால் நாம் சாந்தியும், ஆனந்தமும் அடைவோம், என்று அறிவுரை சொல்வார்.ஆடி வெள்ளியன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பெரியவர் செய்து காட்டியுள்ளார்.அன்று சுமங்கலி பெண்களுக்கு புடவை, வளையல், குங்குமம், மஞ்சள்கயிறு, நாணயம், மட்டைத் தேங்காய் ஆகியவற்றை வழங்குவார். ஒரு ஆடிவெள்ளியன்று அவரைத் தரிசிக்க ஏராளமான தம்பதிகள் காத்திருந்தனர்.
பெரியவர் முன்பிருந்த தாம்பாளத்தில் பட்டுப்புடவை, மாங்கல்யம், குங்குமம் என மங்கலப் பொருட்கள் இருந்தன. யாருக்கு அது பிரசாதமாக கிடைக்குமோ என பக்தர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சதாபிஷேகம் நிறைவேறிய ஒரு தம்பதி வரிசையில் வந்தார்கள். அந்த அம்மையாரிடம் பெரியவர் அதைக் கொடுத்தார். இதன் மூலம் சதாபிஷேகம், பீமரத சாந்தி(70வயது) சஷ்டியப்த பூர்த்தி(60 வயது) அடைந்த மூத்த சுமங்கலிகளுக்கு தானம் செய்து ஆசி பெற வேண்டும் என குறிப்பால் உணர்த்தியுள்ளார். ஆடிவெள்ளியன்று காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்வது மேலான பாக்கியம். வீட்டில் மாலையில் ஐந்து முகமாக தீபமேற்றி, அம்பிகைக்கு பிரசாதம் நைவேத்யம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்க வேண்டும். சுமங்கலிகளுக்கு ரவிக்கைத்துணியும், மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி வாழ்வில் நன்மை உண்டாகும். மட்டைத் தேங்காய் வழங்கினால் பாவங்கள் பறந்தோடும். காஞ்சிப்பெரியவர் காட்டிய வழியில் ஆடி வெள்ளியில் அம்பிகையை வழிபடுவோம்.. வேண்டும் வரம் பெறுவோம்..!