செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 10:07
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு எரிகிறது.
கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை ஊரணிக் கரையில் சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்த சுவாமிகள் ஒருவர் கோவிலில் இந்த ஜோதியை ஏற்றி வைத்துள்ளார். அப்போது ஏற்றப்பட்ட ஜோதி தொடர்ந்து அணையாமல் எரிந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வைத்துள்ளது. மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் அணையாத வகையில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முகங்களோடு எரியும் இந்த விளக்கில் தினமும் காலை, மாலை நேரத்தில் எண்ணெய் ஊற்றப்படுகிறது. விளக்கின் திரிகள் தீர்ந்து போகாமல் இருப்பதற்காக ஏற்கனவே எரியும் திரிகளோடு புதிதாக திரிகள் வைப்பது வழக்கமாக உள்ளது. இந்த தீபத்தை வழிபட்டு சென்றால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழில் வளர்ச்சி ஏற்படும், பொருளாதாரம் மேம்படும் என்பது ஐதீகம் என அந்தப் பகுதி பெரியவர்கள் தெரிவித்தனர்.