சகல நோய் தீர்த்து மக்களை காக்கும் மடிப்பாக்கம் சீதளாதேவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 01:07
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட நாட்டில் சீதள் என்றும், தென் மாநிலங்களில் மாரி, மஹா மாரி, மாரியம்மன், எல்லையம்மன், கருமாரி, சீதளா தேவி, அமிர்தவர்ஷினி என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.
சீதளா தேவி, பார்வதி அம்மனுடன் ஒப்பிட்டு வழிபடுகின்றனர். இந்த தேவியின் வழிபாட்டை தந்த்ர சாஸ்திரத்திலும், புராணங்களிலும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. சீதளா தேவியை, வசந்த ருது என்று அழைக்கப்படும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில், லோக ராணியாக கொண்டாடப்படுகிறாள்.
சீதளா தேவி கருணை உடையவளாகவும், மங்கல ரூபிணியாகவும், தயாநிதியாகவும், அருள் பாலிப்பவளாகவும், தன்னை வேண்டி வழிபாடு நடத்தும் பக்தர்களிடம் இரக்க குணம் உள்ளவளாகவும் விளங்குகிறாள். மக்களுக்கு ஏற்படும் ஜுரம், காலரா, சரும நோய்கள், ரத்த சம்பந்தப்பட்ட சகல நோய்களையும் உண்டாக்கும். அசுர கூட்டங்களை சீதளா தேவி தன்னுள் அடக்கி, 64 வகையான உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய நோய்களை அழித்து காக்கிறாள்.
சீதளா தேவி அம்மன், கன்னிகா ஸ்வரூபிணியாக திகழ்பவள். அவள் தன் தலையில் முறத்தை மகுடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தத்தை கொண்டவளாகவும் விளங்குகிறாள். காத்யாயனி என்றும் சீதளா தேவி அழைக்கப்படுகிறாள். காத்யாயனி என்றால் சகல சக்திகளுக்கும் அதிபதியானவள் என்று பொருள். அவள் தன் குளிர்ந்த பார்வையால், மக்களின் நோய்களை போக்குகிறாள்.
ஜுவராசுரன் என்ற அரக்கன் ஒரு சமயம் குழந்தைகள் மீது விஷக்கிருமிகளை பரவவிட்டு, அதன் வாயிலாக குழந்தைகளுக்கு அம்மை, வைசூரி, காலரா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை பரப்பினான். இதை அறிந்த சீதளாதேவி தன் கருணையால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் போக்கி, அருளினாள். இதன் காரணமாக அவளை, தாய் என்று போற்றி வழிபடுகின்றனர்.
ஸ்தல புரணம்
சீதளாதேவி, ராகவன் குருஜி எனும் சீதளா பட்டாரகருக்கு பிரத்திஷ்யமாகி, தனக்கு மடிப்பாக்கத்தில் கோவில் நிர்மாணிக்க உத்தரவு கொடுத்தார். அதன்படி கடந்த 2003ம் ஆண்டு ஆனி உத்திரத்தன்று, மடிப்பாக்கம், குபேரன் நகர் விரிவு, ஐந்தாவது குறுக்கு தெருவில் மகாசக்தி சீதளாதேவி கோவிலை நிர்மாணித்து, கும்பாபிஷேகம் செய்தார். அன்று முதல் தினமும் ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மடிப்பாக்கம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி அம்மனை தரிசித்து நோய்களில் இருந்து விடுபடு வருகின்றனர்.
சித்ரா பவுர்ணமி திருவிழா
சீதளாதேவி கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி குளிர் நிலவுப் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்விழாவில் காலை வேழமுகப் பெருமானிடம் அனுமதி பெறும் அனுக்ஞை நடக்கும். அதை தொடர்ந்து கலச ஸ்தாபனம், பூஜைகள் துவங்கும். பின், குரு பீடத்தில் பாராயணம், சீதளா தேவி மூல மந்திர ஜபம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி நடத்தப்படும். அதைத் தொடர்ந்து விசேஷ அபிஷேகங்கள், நண்பகல் மகா தீபாராதனை, குரு தரிசனமும் நடத்தப்படும். மாலை சீதளா தேவிக்கு நிறைமணி சந்தனக்காப்பு, அலங்காரமும் நடத்தப்படும்.
பின், பக்தி இசை நிகழ்ச்சிகள் தொடரும். இரவு உற்சவ மூர்த்தி அலங்கார வைபக் காட்சி, அம்பிகை அருளாட்டமும் நடக்கும். அதன் பிறகு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறும். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். சீதளா தேவி கோவிலில், 24ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆக., மாதம் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சீதளா தேவி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல், அலங்காரம் நடக்கிறது.
நண்பகல் கூழ்வார்த்தல், அருளாட்டம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து சீதளா சித்தர் அருளாசி வழங்குகிறார். மாலை கருவறை தெய்வம் அம்பிகை சீதளாவுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு உற்சவ மூர்த்தி அருள் ஆட்டம், தீபாராதனை, மங்கள ஆரத்தி நடக்கிறது. முன்னதாக ஆக., 8ம் தேதி நடக்கும் பவுர்ணமி விழாவில் இரவு 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஆத்மாலய பிரணவ ஒலி சாஸ்தா தாசன் குழுவினரால் இறை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
24ம் ஆண்டு ஆடித்திருவிழா தொடர்புக்கு 90809 11692, 95855 48578