திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் பம்மல் அண்ணா நகர் மூங்கில் ஏரி ஸ்ரீ முத்துமாரியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 01:07
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், கடந்த 55 வருடங்களுக்கு முன், சிறிய ஓலை கொட்டகையில் ஊர் பொதுமக்களால், இக்கோவில் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன்பின், ஊர் பொதுமக்கள் இணைந்து, கோவிலை புதுப்பித்து ஏற்கனவே நான்கு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியாக, 2023ம் ஆண்டு, கோவிலின் கீழ் பகுதியை 5 அடி உயரத்திற்கு உயர்த்தி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இக்கோவிலில், விநாயகர், பால முருகர், கால பைரவர், துர்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னி, நவகிரகம், அஷ்டலட்சுமி ஆகிய பரிவார தேவதைகள் அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், இரண்டாம் வாரம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, பம்மல் சூரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஜோடிக்கப்பட்டு, பெண்கள் விளக்கு பூஜையுடன் ஊர்வலமாக இக்கோவிலுக்கு வருவர். தொடர்ந்து, இரண்டாம் வாரம் சனிக்கிழமை அன்று, சக்தி கிரக ஊர் வலமும், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல், இரவு சுவாமி வீதி உலா ஆகியவை நடக்கும்.
சித்திரை பவுர்ணமி அன்று, 108 பால்குட ஊர்வலம், நவராத்திரியை முன்னிட்டு, 10 நாட்கள் சிறப்பு அலங்காரம் மற்றும் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆடிபூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மார்கழி மாத பூஜை, மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை பூஜை ஆகியவை சிறப்பாக நடக்கின்றன. அண்ணா நகர், பம்மல் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை மனமுருகி வேண்டினால், குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலின் சிறப்பு
* அம்மன் நாகரூபமாக வீற்றிருப்பதால் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்வது சிறப்பு
* கோவிலில் உள்ள, அரசமரத்தை 6 முறை வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
* தேய்பிறை அஷ்டமி அன்று, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
* ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் அன்று, அஷ்டலட்சுமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோவில் திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை