சிதம்பரம்; சிதம்பரம் கீழ்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள பிரசித்திப் பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 22ம் தேதி இரவு, தெருவடைச்சான் உற்சவம் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள், கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனை செய்து, நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. மாலை, அக்னி சட்டி எடுத்து, கரகத்துடன் தீமிதி விழா துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தீமிதி விழா காரணமாக பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. டி.எஸ்.பி., லாமேக், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அம்பேத்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று, மஞ்சள் நீர் உற்சவம், இரவு ஊஞ்சல் உற்சவம், காத்தவராய சுவாமி கதை பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.