சிருங்கேரியில் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தின் 33வது வர்தந்தி மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 04:07
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் விசேஷ ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றன. 36 கோவில்களில் இருந்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி ஸ்ரீமடத்தின் அனேக சேவைகளையும், நடந்த நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு பேசியதாவது: ஸ்ரீசன்னிதானத்தின் சமீபத்திய திருச்செந்தூர் விஜயம் 100 வருடங்களுக்கு முன் 1924ம் ஆண்டு சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகர பார்தீ மகாசுவாமிகள் சென்று சரியாக 100 வருடம் கழித்து நடந்தது தெய்வ செயல். அதனை கண்டு களித்த திருசுதந்திரர்கள் எங்கள் முப்பாட்டனார்கள் ஆதி சங்கரர் பூஜை செய்ததை பார்த்திருக்கலாம். அந்த வம்சத்தில் வந்த நாங்களும் இன்று ஆதி சங்கரரை பார்த்தோம் என மகிழ்ந்து கூறினர். அதேபோல் ராமேஸ்வரம் விஜயமும் அனைத்து பீடாதிபதிகளும் எவ்வாறு விஜயம் செய்தனரோ அதே போல நிகழ்ந்தது. ஸ்ரீசுவாமிகளின் பிரயாக் ராஜ், காசி, அயோத்யா யாத்திரைகளும் நன்கு நடந்தன. சாகித்ய சாரதா எனும் பத்திரிகை, தர்ம சாஸ்த்ரா சபா ஆகியவை துவங்கப் பட்டுள்ளன. காசி, ராமேஸ்வரம், பண்டர்பூர், அயோத்யா ஆகிய இடங்களில் நித்ய அன்னதானம் நடைபெறுகிறது. சிருங்கேரி மருத்துவமனையில் நவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ நிறுவப்பட உள்ளன. நடமாடும் மருத்துவ மனையானது கிராமப்புறங்களில் சேவை நடத்தி வருகிறது. ஸ்ரீ மடத்து அனைத்து புத்தகங்களும் ஆன்லைனில் கிடைக்கும். சிறார்களின் வழிநடத்தலுக்காக பால பாரதி எனும் அமைப்பு செயல் படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அருளுரை வழங்கிய சுவாமிகள் கூறியதாவது; சிருங்கேரி பீடத்தின் அனைத்து ஆசாரியர்களும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தான் இருந்திருக்கின்றனர் மற்றும் அனைத்து நல்ல காரியங்களையும் செய்திருக்கின்றனர். அதே வழியில்தான் எங்களது குருநாதர் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் 50 வருடங்களாக அனுக்ரஹம் செய்து வருகிறார். ஸ்ரீமடம் செய்யும் நற்காரியங்களை எல்லோருக்கும் தெரியவைப்பதின் காரணம் ஒவ்வொருவருக்கும் அவைகளில் சிறிதாவது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகதான். சனாதன தர்மரத்தின் இரண்டு அடிப்படை பகவத் ஆராதனை, பரோபகாரம். மனிதனுக்கு தன் ஒவ்வொரு காரியத்திற்கும் இறைவனின் அனுக்ரஹம் வேண்டும், தம்முடைய முயற்சியும் வேண்டும். உலகத்தின் ஆதாரம் தர்மம். அனைவருக்கும் தர்மத்தை காக்கும் கடமை உள்ளது. தர்மத்தினை காப்பது என்பது அதனை செயலில் கொண்டு வந்து அதன்படி வாழ்வது என்பது தான். நாம் நம் சந்ததியினருக்கு கொடுக்கும் சொத்து நமது இந்த உயர்ந்த கலாசாரம் மட்டுமே. இவ்வாறு சுவாமி கூறினார். முடிவில் மஹா சன்னிதானம் அருளுரை தொகுப்பினை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிட்டார்.