கண்ணமங்கலம்; கண்ணமங்கலம் அருகே, துரிஞ்சிக்குப்பம் ஓம்சக்தி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில், பக்தர் ஒருவர் வெறும் கையால் சுட்ட வடை, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்திலுள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில், 25ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சக்தி ஹோமம், மஹா அபிஷேகம், மஞ்சள் குட சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து முதுகில் அலகு குத்தி அம்மன் தேர் இழுத்து வீதி உலா, 108 பால்குட ஊர்வலம் நடந்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மார்பில் உரல் வைத்து, உலக்கையில் மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை எடுத்தல் நிகழ்வு நடந்தது. இந்த வடை, ஏலம் விடப்பட்டது. இதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால், பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததில், முதல் வடை, 4,000 ரூபாய், 2ம் வடை, 1,200 ரூபாய், 3ம் வடை, 1,000 ரூபாய் என ஏலம் போனது.