திருவொற்றியூர் காலடிப்பேட்டையில், 500 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் ஆண்டாள், நாச்சியார் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பெருமாளுடன் கோவிலை வலம் வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, ஆண்டாளுடன் பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெறும் இந்த உத்சவத்தில், ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கிளி மாலை வரவழைக்கப்பட்டு, விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, கோவிலை சுற்றி வலம் வந்த ஆண்டாள், ஒய்யாளி நடனமாடி மகுடி இசைக்கு தரையில் நெளிந்து ஆடியதை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதையடுத்து, ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்த ஆண்டாளை, பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் வளையல் உட்பட, மூன்று வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.