உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் சார்பில் உலக நன்மை வேண்டியும், அமதி நிலவ வேண்டியும், மழை வேண்டியும் முளைப்பாரி விழா நடந்தது.
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் சார்பில் உலக நன்மை வேண்டியும், அமதி நிலவ வேண்டியும், மழை வேண்டியும் முளைப்பாரி விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் இயக்குனர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். ஸ்ரீசாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேமா ப்ரியா அம்பா, முளைப்பாரி விழாவினை தீபாரதனையுடன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ருத்ர குமார் மற்றும் லலிதா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளியந்தாங்கல், அஜீஸ் நகர், ஆர்.ஆர். குப்பம், மூலசமுத்திரம், ஏ. சாத்தனூர், எடைக்கல், பாலி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். அங்கு ஸ்ரீ சாரதா அம்பாள் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஸ்ரீ சாரதா அம்பாள், எள், நெல், கம்பு, கேழ்வரகு சோளம், மணிலா உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தானிய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் விழாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், குடிநீரின் தேவைகள் குறித்தும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் பெண்கள் விளக்கம் அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள். மாணவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.