காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில், இடிக்கப்பட்ட அன்னதான கூடம் மீண்டும் கட்டாததால், பக்தர்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக அரசின், அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அன்னதான கூடம் இயங்கிய கட்டடம் பழுதானதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஆறு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. புதிய அன்னதான கூடத்திற்கான கட்டுமானப் பணி துவங்காததால், அன்னதான திட்டத்தின் கீழ், கோவிலுக்கு வரும் 50 பேருக்கு மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய மூலவர் சன்னிதிக்கு செல்லும் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அன்னதானம் சாப்பிடும் பக்தர்கள், நெருக்கடியான இடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிட சிரமப்படுகின்றனர். குறிப்பாக வயது மூப்பு காரணமாக, சில பக்தர்களால் கால்களை மடக்கி தரையில் அமர்ந்து சாப்பிட முடியாத சூழல் உள்ளது. மேலும், காற்றடிக்கும்போது பறக்கும் குப்பை, உணவில் வந்து விழும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ், பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வகையில், புதிதாக அன்னதான கூடத்தை கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவில் செயல் அலுவலர் சா.சி.ராஜமாணிக்கம் கூறியதாவது: சந்தவெளி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் சிதிலமடைந்த கட்டடத்தில் இயங்கிதால் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய அன்னதான கூடம் கட்டுவதற்காக கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அன்னதானகூடம் கட்டுமானப் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.