ஆடி மாதம் 18ம் தேதி, ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, நீர்நிலைகளை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதன்படி, ஆடிப்பெருக்கு தினமான நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பஞ்சகங்கை தீர்த்தம் எனப்படும் தெப்பகுளத்தில், புனித நீர் நிரப்பிய கலசத்திற்கு, வேத மந்திரங்கள் ஓதி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, புனித நீர் நிரப்பிய கலசம், கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மஹா சுவாமிகள், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் தெளித்து ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, மூலவர் அம்மனுக்கு பழ வகைகள், இளநீர், பால், தேன், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடந்தது.