சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கோவில் தேர் திருவிழாவிற்கு, ஆர்.டி.ஓ., தடை உத்தரவு பிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராம மாரியம்மன் கோவிலில், தேர் திருவிழா நடத்துவதில், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் கடந்த 2ம் தேதி, அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. உடன்பாடு ஏற்படாததால், தேர் திருவிழா நடத்த ஆர்.டி.ஓ., தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடத்துவதில், இரு தரப்பு பிரச்னை தொடர்பாக, போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. சமாதான கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, இரு தரப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை. மேலும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை செய்யப்படுகிறது. கோவிலில் வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, யாரையும் வழிபாடு நடத்தவிடாமல் தடுக்க கூடாது. கோவில் வழிபாட்டில் மேளம் அடிக்கவோ, கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த கூடாது, வழிபாட்டின்போது மதம், ஜாதி ரீதியாக டீ சர்ட் அணிய கூடாது. விழா தொடர்பான பேனர் வைக்க கூடாது, பாரதம் பாடும் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் திவ்யா, அரசம்பட்டு வி.ஏ.ஓ., ஜெயராஜ் முன்னிலையில் கோவில் வளாகத்தில் ஒட்டப்பட்டது.