திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்வசத்தின் 2-ஆம் நாளான இன்று உற்சவமூர்த்திகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருமலையில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் நடைபெறும் நித்ய, வாராந்திர , வருடாந்திர பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலே பக்தர்கள், ஊழியர்கள் , அதிகாரிகளால் ஏற்பட்ட தோஷங்களைக் களைவதற்காக இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்ப சாமி சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளினர். பின்னர் பால், தயிர், தேன், பழரசம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சனப் பொருள்களை திருமலை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர, அர்ச்சகர்கள் அபிஷேகம் நடத்தினர். அதன்பின் யாகச்சாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல வண்ண பட்டு நூல்களால் ஆன பவித்ரங்கள் (மாலைகள்) உற்சவமூர்த்திகள், மூலவர், கோயிலில் உள்ள விக்ரகங்கள், கொடிமரம், விமான வெங்கடேஸ்வர சாமி உள்ளிட்டோருக்கு அணிவிக்கப்பட்டன. அதன்பின் மாலை உற்சவமூர்த்திகள் பவித்ர மாலைகளை அணிந்தபடி, மாடவீதியில் தன் உபய நாச்சியார்களுடன் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான செயல் அதிகாரி சியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி, துணை செயல் அதிகாரி லோகநாதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து நாளை மகாபூர்ணாஹூதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற உள்ளது.