சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.
வருகின்ற ஆக. 27ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் தயாராகி வருகிறது. இந்து முன்னணி ஏற்பாட்டில், கடலூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. 3 முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் முழுவதும் இங்கிருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடைபெறும். அதைத்தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் அந்தந்த பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் கூறியதாவது, வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரசாயனம் கலக்காமல் கிழங்கு மாவு, பேப்பர், மரக்கூழ், இயற்கை வர்ணம் ஆகியவற்றை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. காளை, கருடன் சிங்கம், ஆஞ்சநேயர் உடனும், பல்வேறு வடிவங்களிலும் சிலைகள் தயாரிக்கப்படுகிறது, என்றார்.