பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில்
பதிவு செய்த நாள்
15
ஆக 2025 03:08
சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. சுயம்புவாக உருவான புற்றுக்கோவிலை, ஆரம்பத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரி மேஸ்திரி உள்ளிட்ட ஊர்மக்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து வழிபட துவங்கினர். அதன்பின், சிறிய அளவில் கோவில் கட்டி, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் என பெயர் சூட்டி, வழிபட்டனர். புற்றுக்கோவில் என அழைக்கப்படும், இக்கோவிலுக்கு வந்து, அம்மனை மனமுருகி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத திருவிழா, இசை கச்சேரி, கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா என வெகு சிறப்பாக நடக்கும். இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே மாதம், 23ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று காலை, விநாயகர் பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தெய்வ விக்ரஹங்களுக்கு காப்பு பட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். இதைதொடர்ந்து, இக்கோவிலில், 46ம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் 39ம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 17ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆக., 15: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. காலை 8:30 மணி காப்பு கட்டுதல்.10:00 மணி பூங்கரகம் வீதி உலா. பகம் 12:00 மணி அன்னதானம். மாலை 6:00 மணி அம்மன் வீதி உலா ஆக., 16: அதிகாலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. பிற்பகல் 12:00 மணி அன்னதானம் ஆக., 17: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. 11:00 மணி கூழ் வார்த்தல். மாலை 6:00 மணி தீமிதி திருவிழா.
|