பதிவு செய்த நாள்
19
ஆக
2025
09:08
புண்ணிய நதிகளில் முக்கியமானதாக கருதப்படுவது கங்கை நதி. இதில் நீராடினால் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இந்த காரணத்தால், காசியில் பாய்ந்தோடும் இந்த நதியில் வாழ்க்கையில் ஒரு முறையாவது, புனித நீராட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும். கங்கையில் நீராட காசிக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கர்நாடகாவிலும் கங்கை குளம் உள்ளது. பக்தர்களின் பாவங்களை போக்குகிறது.
சித்ரதுர்கா மாவட்டம் கோட்டைகளுக்கு மட்டும் பெயர் பெற்றது இல்லை. வரலாற்று பிரசித்தி பெற்ற பக்தர்களை இழுக்கும், அற்புதமான கோவில்களும் உள்ளன. இக்கோவில்கள் ஒவ் வொன்றும் சிறப்பு அம்சங் கள் கொண்டுள்ளன. இவற்றில் ஹாலு ராமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
சித்ரதுர்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகாவில் ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
திரேதாயுகம் இக்கோவில் பல அற்புதங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது. குறிப்பாக இங்குள்ள கங்கை குளம் புனிதமானதாக கருதப்படுகிறது. இக்குளம் திரேதாயுகத்தில் ஸ்ரீராமரின் கையால் உருவாக்கப்பட்டது. கோவிலில் குடிகொண்டுள்ள சிவலிங்கமும் ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கங்கையை வணங்கி நீராட வேண்டும். அதன்பின் குளத்தின் முன் அமர்ந்து தங்களின் வேண்டுதல், மனதில் உள்ள விருப்பங்களை கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் குளத்தில் மிதக்கும் சில பொருட்களை வைத்து, தங்களின் பிரார்த்தனை நிறைவேறுமா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். பொருட்களை வைத்து அர்ச்சகர் விவரிப்பார்.
வெற்றிலை, பூ, பழம், தேங்காய், பாக்கு, வெள்ளி நாணயம், வில்வ இலை மிதந்து வந்தால், வேண்டுதல் நிறைவேறும். ஒரு வேளை எள், தர்ப்பை, கல், மண் போன்ற பொருட்கள் மிதந்து வந்தால், நிறைவேறாது என, புரிந்து கொள்ள வேண்டும், அதன்பின் அர்ச்சகர் பரிகாரம் கூறுவார்.
கர்நாடகாவின் பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியர், அதிகம் வருகின்றனர். கங்கை குளத்தில் மூழ்கி எழுந்து வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மைசூரு மஹாராஜா ஜெய சாமராஜ உடையார், குழந்தை வரம் வேண்டினார். அப்போது வெள்ளி தொட்டில் மிதந்து வந்தது. அதன்பின்னரே ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் பிறந்தாராம். வால்மீகி மகரிஷியின் மனைவி சுததிதேவி, காசியில் கங்கைக்கு சமர்ப்பித்த வைரம் பதித்த கடகம், ஹொச நகரில் உள்ள புற்றில் கிடைத்ததாம். அந்த இடத்தில் கங்கை ஊற்றெடுத்ததாம். இதையறிந்த வால்மீகி மகரிஷி, அந்த இடத்தில் நிலைத்து நின்று, பக்தர்களுக்கு அருள் புரியும்படி கங்கையிடம் கூறினார்.
பால் நிறம் கங்கை விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டு, ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு சென்றார்.குளத்தில் உள்ள நீர் பால் நிறத்தில் காணப்படுகிறது. இதனால் இங்குள்ள சிவனுக்கு ஹாலு ராமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு கங்கை உற்பத்தியாக காரணமாக இருந்த வால்மீகீயின் மனைவி சுததிதேவிக்கும் சிலை நிறுவப்பட்டுள்ளது. குடும்பத்தில் பிரச்னை, திருமண தடை, அரசியல் முன்னேற்றம், குழந்தை இல்லாமை உட்பட பல பிரச்னைகளால் வாடுவோர், இங்கு வந்து கங்கை குளத்தில் மூழ்கி, ராமேஸ்வரரை வணங்கினால், வேண்டுதல் நிறைவேறும்.