பதிவு செய்த நாள்
19
ஆக
2025
09:08
கோகர்ணா என்றால், கோவில்கள் நிறைந்த டவுன் என்றே சொல்லலாம். அத்தனை கோவில்கள் உள்ளன. நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிவனின் ஆத்மலிங்கம், இங்கு மட்டுமே உள்ளது.
சிவனை நினைத்து தவமிருந்த ராவணன், அவரிடம் இருந்தே ஆத்மலிங்கம் பெற்றார். இதை இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்த விநாயகர், தனது சூட்சுமத்தால், லிங்கத்தை கோகர்ணாவில் நிலை நிறுத்தினார். இறந்தவர்கள் உடலை காசியில் தகனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, கோகர்ணாவிலும் உள்ளது.
புராணங்கள்படி, பிரம்மனின் வலது கையில் இருந்து தம்ராகவுரி என்ற பெயரில் பார்வதி பிறந்தார். பரமேஸ்வரை விவாகம் செய்ய, சத்யலோகத்தில் இருந்து கோகர்ணாவுக்கு அவர் வந்தார்.
இங்கு, தன் கையில் பூக்களை வைத்து கொண்டு கிழக்கு திசையை நோக்கி, சிவனை நினைத்து தவம் இருந்தார். இதை பார்த்த சிவன், அவரிடம் காரணம் கேட்டார். ‘தங்களை மணம் முடிக்க வேண்டும்’ என்ற தன் விருப்பத்தை கூறினார். அதன்படி திருமணம் நடந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோகர்ணா மஹாபலேஸ்வரா கோவில் பின்புறம், தம்ரா கவுரி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் சுவற்றில், ‘சைல புத்ரி, பிரம்மாசரினி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாத்தா, கார்த்தாயினி, காலவர்தி, மஹாகவுரி, சித்திதத்ரி’ என்ற பார்வதியின் பல்வேறு அவதாரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன.மூலஸ்தானத்திற்கு எதிராக முன்னர் தம்ரா கங்கை என்ற நதி ஒடியது. தற்போது இது தெப்பக்குளமாக மாறி உள்ளது. இதை, ‘தம்ராபர்னி’ என்று அழைக்கின்றனர். இங்கு இறந்தவரின் அஸ்தியை கரைத்தால், அவர் சொர்க்கத்திற்கு செல்வார் என்றும் நம்பப்படுகிறது.
நவராத்திரியின் போது விஜயதசமி அன்று, மஹாபலேஸ்வரர், பார்வதியை தேடி தம்ராகவுரி கோவிலுக்கு வருகை தருவார். புரட்டாசி மாதத்தில் சிவன் – பார்வதிக்கு திருமண சம்பிரதாயங்கள் நடக்கும். இதில் பங்கேற்கும் திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு திருமணம் நடப்பதாக ஐதீகம்.
அதேவேளையில், விவகாரத்து பெற்றவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால், அவர்கள் மீண்டும் இணைவது உறுதி என்றும் கூறுகின்றனர்.