கர்நாடகாவில் பாரம்பரியமான கோவில்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் பல கோவில்கள், வெளிச்சத்துக்கு வரவில்லை. இக்கோவில்களில் விசித்திரமான வழிபாடுகள், நம்பிக்கைகள் கொண்டுள்ளன. இவற்றில் அதானியின், சங்கமநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு குடிகொண்டுள்ள சங்கமநாத சுவாமி, திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், கிரணகி கிராமத்தில் சங்கமநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அற்புதமான புண்ணிய தலமாகும். பல சிறப்புகள் இங்குள்ளன. மக்கள் கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். இதற்கு காரணம், கோவிலில் குடிகொண்டுள்ள சங்கமநாத சுவாமி. பல நுாறு ஆண்டுகளாக கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இரவு நேரத்தில் கடவுள் ஊரை சுற்றி வருவதாக ஐதீகம். எனவே இரவு நேரத்தில் மறந்தும், கோவில் வளாகத்துக்கு செல்லக்கூடாது. கோவில் கோபுரத்தை விட, உயரமாக யாரும் மாடி வீடுகள் கட்டக்கூடாது. ஒருவேளை கட்டினால், அவர்களின் குடும்பத்தினருக்கு, கடவுளின் அருள் கிடைக்காது என்பது, மக்களின் நம்பிக்கை. கடவுளை விட நாம் பெரியவர்கள் இல்லை என்பதை உணர்த்தவே, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மாடி வீடுகளை காண முடியாது.
யாரும் குற்றங்களில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக யாராவது திருடினால், உடனுக்குடன் கடவுள் தண்டிப்பார். திருடர்களை வேதாளம் வடிவில், பின் தொடர்ந்து மிரட்டுவாராம். இது போன்ற கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல், அலட்சியப்படுத்திய பல குடும்பங்கள், கஷ்டங்களுக்கு ஆளாகி தெருவுக்கு வந்தன. நிம்மதியை இழந்து ஊரை விட்டே சென்றுவிட்டன. இதை கண்ணால் கண்டதால், கிரணகி கிராமத்தினர் பயபக்தியுடன், கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்கின்றனர். இன்று, நேற்றல்ல, பல நுாறு ஆண்டுகளாக இந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கின்றனர்.
தினமும் சங்கமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. ஆண்டு தோறும் சிறப்பாக திருவிழா நடத்துகின்றனர். அதிநவீன யுகத்திலும், மக்களின் இத்தகைய நம்பிக்கைகள் ஆச்சரியம் அளிக்கிறது. ஒழுங்கு, நல்ல கலாசாரத்தை பின்பற்றி கிரணகி கிராமத்தினர், மற்றவருக்கு முன் மாதிரியாக வாழ்கின்றனர்.
சங்கமநாத சுவாமியை தரிசித்தால், வாழ்க்கையில் கஷ்டங்கள் மறைந்து, நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். தீய சக்திகளின் பிடியில் இருந்தும் விடுபடலாம். இதே காரணத்தால், கர்நாடகா மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல மாநலங்களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.