ஸ்ரீபெரும்புதுார்; ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, கோடையாண்டவர் மலர் அலங்கார சேவையில், வல்லக்கோட்டை முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏழு அடி உயரத்தில் முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி, உற்சவர் கோடையாண்டவர் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மூலவர் எலுமிச்சை மாலை, சாமந்தி மலர் மாலை அலங்காரத்திலும், சஷ்டி மண்டபத்தில் உற்சவர், கோடையாண்டவர் மலர் அலங்கார சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை முதல் ஏராளமான பக்தர்கள், வரிசையில் வந்து அரோகரா, அரோகரா முழக்கமிட்டு முருக பெருமானை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு கதம்பசாதம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.