சென்னை; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், மூன்று நாள் பவித்ர உத்சவம் நேற்று துவங்கியது. கோவிலில் பூஜையின்போதும், மந்திர உச்சரிப்புகளிலும் தவறுகள் நிகழும். இவற்றால் ஏற்படும் தோஷங்களை நீக்கி, பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ர உத்சவம். இந்த உத்சவத்தில் உத்சவ விக்கிரகங்கள் மட்டுமின்றி, மூலவருக்கும் பவித்ர மாலைகள் சார்த்தப்படுகிறது. பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, தி.நகர் திருமலை தேவஸ்தான பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது. பவித்ர உத்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், ஸ்நபன திருமஞ்சனம், பவித்ர பிரதிஷ்டை நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, கும்ப பிரதட்சணம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.