நாகர்கோவில்; திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கேரள மற்றும் தமிழ்நாடு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
திருவிதாங்கூர் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில் மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் இங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி நாளை காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெளியே கொண்டுவரப்பட்ட தேவி விக்ரகத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இன்று காலை இங்கிருந்து வேளிமலை முருகன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகமும் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடையும். தொடர்ந்து இங்கிருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது.