திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2025 10:09
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று காலை நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் திருமண பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திரு வெள்ளக்குளம் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் 38வது தலமாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார தலமாகவும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புடைய கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டுகொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. பூஜைகளை கோகுல் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். தொடர்ந்து 26 ஆம் தேதி நாளை கருட சேவையும், அக்டோபர் 1ஆம் தேதி திருக்கல்யாணமும், 3ம் தேதி தீர்த்தவாரியும், 4ம் தேதி கொடி இறக்கமும் 5ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.