பதிவு செய்த நாள்
21
அக்
2025
10:10
கோவில்கள் என்றாலே, மனதுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும் இடம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக சாய்பாபா கோவில்கள், மிகவும் அமைதியான சூழ்நிலையில் இருக்கும். மைசூரிலும் இது போன்ற கோவில் அமைந்துள்ளது.
மைசூரு நகரின், தியாகராஜ சாலையில் ஸ்ரீசாய்பாபா கோவில் உள்ளது. இது, 87 ஆண்டுகள் வரலாறு கொண்டது, பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த கோவிலை நாராயண மஹராஜ் என்பவர் கட்டியுள்ளார். இதே இடத்தில் சாய்பாபா, தன் பக்தர்களுடன் ஆன்மிக பேச்சு நடத்தியதாக ஐதீகம்.
பிரசாத பொடி மஹாராஷ்டிராவின் ஷிருடி சாய் பாபா கோவில் போன்று, மைசூரின் தியாகராஜ சாலையில் உள்ள சாய்பாபா கோவிலிலும், தினமும் 24 மணி நேரமும் தீ எரிகிறது. இதில் இருந்து கிடைக்கும் பொடி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த பொடியில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் வாட்டி, வதைக்கும் கஷ்டங்களால் மனதில் அமைதியின்றி தவிப்போர், நோய்களால் அவதிப்படுவோர், சாய்பாபா கோவிலுக்கு வந்து வேண்டினால் நோய்கள் குணமாகும். கஷ்டங்கள் மறைந்து, வாழ்க்கை வளமாகும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து தியானம் செய்ய விரும்புவோருக்கு, இக்கோவில் தகுந்த இடமாகும். இங்கு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி, தியானம் செய்தால், மனம் அமைதியடையும். சாய்பாபா நம் அருகில் அமர்ந்து மூச்சு விடுவதை உணர முடியும். இதை பல பக்தர்கள் உணர்ந்துள்ளனர்.
தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். சாய்பாபாவை தரிசனம் செய்கின்றனர்.
இங்கு அமர்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்கின்றனர். இங்கு வந்த பலரின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கோவிலின் மகத்துவத்தை அறிந்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
பஜனைகள் பவுர்ணமி நாட்கள், வியாழக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். தியானம் செய்ய இட வசதியும் இங்குள்ளது. கோவிலின் கீழ் தளத்தில், நாராயண மஹராஜ் தவம் செய்தாராம்.
கோவிலில் தினமும் பஜனைகள், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அரசியல்வாதிகளும், முக்கிய புள்ளிகளும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.