குலு பள்ளத்தாக்கை கடவுள்கள் பள்ளத்தாக்கு என அழைக்கின்றனர். இந்த குலுவுக்கு நேரடி ரயில் கிடையாது. சிம்லா வரை ரயிலில் செல்லலாம். பிறகு அங்கிருந்து 220 கி.மீ., பயணம் (மணாலியை அடைய) செய்ய வேண்டும். டெல்லியிலிருந்து மணாலிக்கு நேரடி விமானம் உண்டு. குலுவிலிருந்து 42-வது கி.மீ.,ரில் மணாலி உள்ளது. இந்த மணாலியில் துங்கிரி காடு உள்ளது. இதில் இடும்பிக்குக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ராஜா பகதூர் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இடும்பிக்குக் கோயிலில் சிலைகள் எதுவும் கிடையாது. கால்தடங்கள் மட்டுமே பதிந்துள்ளன. அதைத்தான் மக்கள் வணங்குகிறார்கள். கு<லுபரம்பரையில் வந்த மன்னர்களின் சார்பாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும், இடும்பி இருப்பிடத்தில் சம்மதம் பெற்றே செய்வது காலம் காலமாக தொடருகிறது. இப்படி சம்மதம் கிடைத்ததும். இடும்பியை திருப்திப்படுத்த மிருக பலி கொடுப்பதும் வழக்கம். இந்தக் கோயிலை துங்கரி கோயில் எனவும் அழைக்கின்றனர்.. டிசம்பரில் இடும்பியின் பிறந்த நாள் வருவதாகக் கணக்கிட்டு மூன்று நாட்கள் சிறப்பாக மேளா நடத்துகின்றனர். அப்போது அரிசியில் தயாரிக்கப்பட்ட பீர் மது தயாரிக்கப்பட்டு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனுக்குக் கோயில் சார்பாக சதய விழா நடப்பதுபோல்... ராஜா பகதூர்சிங் பிறந்த நாள், விழாவாக எடுக்கப்படுகிறது! இந்தப் பகுதியில் இது பிரபலமான கோயில் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையில் அலைமோதுகிறது. நல்ல வெளிச்சம் வந்த பின், பார்த்துத் திரும்ப வேண்டிய கோயில் இது.