கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது; அறநிலைய துறைக்கு உத்தரவு
பதிவு செய்த நாள்
24
அக் 2025 12:10
சென்னை: ‘கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என, அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, பெரும்பாலான சொத்துக்கள், பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை. பார்க் டவுன் நைனியப்பா நாயக்கன் தெரு, சவுகார்பேட்டை அன்ன பிள்ளை தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு போன்றவற்றில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இங்குள்ள கட்டடங்களை இடித்து விட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணியை, அறநிலைய துறை துவக்கி உள்ளது. அதுவும் முத்துகுமார சாமி கோவிலின் நிதியை வைத்து, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. கோவில் நிதியில், வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அறிந்தும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் பணியை, அறநிலைய துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். கடந்த ஆகஸ்ட், 4ல், இது தொடர்பாக அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் பணிக்கு கோவில் நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், முருகானந்தம் ஆஜராகினர். அப்போது,‘கோவில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, பல கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன’ என்றனர். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘கட்டுமானப் பணிகள், தற்போது, 80 சதவீதம் முடிந்த நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டடங்கள் வாயிலாக, மாதம், 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யும் பணியை அரசு செய்துள்ளது. அறங்காவலர் பதவிக்கு மனுதாரர் விண்ணப்பம் செய்திருந்தார். அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த விபரங்களை மனுவில் மறைத்துள்ளார்,’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதேசமயம், அந்த கட்டுமானங்களை, அறநிலைய துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த மனுவுக்கு, நவ., 21ம் தேதிக்குள், தமிழக அரசு, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கோவில் நிதியில் வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
|