திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உயர்மட்ட பாலத்தின் அருகே மாரியம்மன் கோவில் முன்புறத்தில் சாலை ஓரம் சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கூறியதாவது. திருக்கோவிலூர், கீழையூர், மாரியம்மன் கோவில் முன்புறத்தில், சாலை ஓரம் இருக்கும் புடைப்பு சிற்பத்தை பலரும் என்ன சிலை என்று தெரியாமலேயே இதனால் வரை வழிபட்டு வந்தனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்கள் அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தபோது, 30 அங்கு உயரம், 26 அங்கு அகலம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என தெரிய வந்தது. புடைப்புச் சிற்பமான இதில் விரிசடையுடன் காதுகள் மற்றும் கழுத்திலும் அணிகலன்கள் அழகுற காட்சியளிக்கிறது. இடையில் புரிநூல் அணிந்து, வயிற்றுக்கட்டுடன் அரையாடையுடன் காட்சியளிக்கிறார். புஜங்கள் மற்றும் கணுக்கால்களில் காப்பு, வலக்கையில் மழுவுடனும், இடக்கையில் தொடையை தாங்கியவாறு பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவர். சிவபெருமானின் உணவு மற்றும் உடை ஆகியவற்றின் அதிபதி. சிவா ஆலயங்களில் காவல் தெய்வமாகவும், கணக்கு அதிகாரியாகவும் உள்ளார். இவ்வாறு கூறினார் உதியன்.