பதிவு செய்த நாள்
11
நவ
2025
11:11
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் சாம்ராஜ்நகரில் உள்ள லட்சுமி வரதராஜசுவாமி கோவிலும் ஒன்றாகும்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகாவின் தெரகனாம்பி கிராமத்தில் லட்சுமி வரதராஜர் கோவில் உள்ளது. புராதனமான இக்கோவில், விஜயநகர சாம்ராஜ்யத்தில் 1303 ல் கட்டப்பட்டது. அற்புதமான சிற்பக்கலைக்கு பெயர் பெற்றுள்ளது. பக்தர்களை தன் வசம் ஈர்க்கிறது.
கல் கம்பவங்கள் கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வரதராஜசுவாமி, லட்சுமிதேவியின் விக்ரகங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன், மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.
புராதன ஆவணங்களின்படி, இந்த விக்ரகங்கள் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் வளாகத்தில் விஜயநகர பாணி கல் கம்பங்கள், சிற்பங்களை பார்க்கலாம். இங்கு ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடன், ராமானுஜாச்சார்யா சன்னிதிகள் உள்ளன.
மூக்குத்தி ஒளி இக்கோவில் வைஷ்ணவ பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. 40 அடி உயர கல் கம்பத்தை காணலாம். இங்குள்ள கருடன் சிலையை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி, பிரம்ம ரத உற்சவம் உட்பட பண்டிகை நாட்களில் திரளான பக்தர்கள் வருகின்றனர். வரதராஜ சுவாமியை தரிசனம் செய்கின்றனர். புஷ்பக விமானத்தில் மஹா விஷ்ணு, உலக சஞ்சாரம் செல்லும் போது, பூலோகத்தில் லட்சுமி தேவி குளத்தில் குளிக்கிறார். அவரது மூக்குத்தியில் இருந்த பேரொளி, ஆகாயத்தில் செல்லும் மஹா விஷ்ணு முகத்தில் மோதி, முன்னோக்கி செல்ல விடாமல் தடுக்கிறது. பூமிக்கு வருகிறார். லட்சுமி தேவியை திருமணம் செய்து கொள்கிறார். எனவே இந்த தலத்துக்கு ‘லட்சுமி வரதராஜர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.
தினமும் கோவிலில் பூஜைகள், ஹோமங்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வந்து லட்சுமி வரதராஜ சுவாமியை தரிசித்தால், குடும்பத்தில் அமைதி ஏற்படும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கை கூடும் என்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.