புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் அவதார நுாற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சிறப்பாக நடந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து பக்கர்கள் பகவானை அருள் நாடி புட்டபர்த்தி வந்து கொண்டுள்ளனர். பகவானின் பாதம் பட்ட அந்த புனித பூமியில், அவரின் லீலைகளை விளக்கும் வித்தியாசமான லேசர் ஒளிக்காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர். புட்டபர்த்தி முழுதும் சாய் ராம் நாமம் விண்ணைப் பிளக்கிறது. ஸ்ரீசத்ய சாய்பாபாவின் திவ்ய நாமத்தை பக்தர்கள் தொடர்ந்து உச்சரித்த வண்ணம் உள்ளனர். அங்கு நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சித்ராவதி ஆற்றங்கரையில் நடைபெறும் லேசர் ஷோ, பக்தர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆற்றின் நீரையே திரையாக பயன்படுத்தி, அதில் லேசர் ஒளி பாய்ச்சி, இசையுடன் காட்சிகளை உருவாக்கும் அற்புத தொழில்நுட்பத்தில் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவை கண்டு பக்தர்கள் பரவசமடைகின்றனர். பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மனிதநேயம், சேவை, மற்றும் ஆன்மீக செய்திகளை ஒளி, இசை, நீர் என மூன்று கூறுகள் ஒன்றிணைந்து உயிரோட்டமூட்டின. இந்த லேசர் நிகழ்ச்சி, பக்தர்களின் இதயங்களில் ஒளி ஏற்றிய ஆன்மீகக் கொண்டாட்டம் என சொன்னால் அது மிகையாகாது. நவம்பர் 23 ஆம் தேதி வரை தினமும் இரவு 7:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை இந்த ஸ்பெஷல் ஷோ நடைபெறுகிறது. அமைதி, சேவை, அன்பு எனும் சாய்பாபாவின் மூன்று நெறிகளும், இந்த ஒளிக்காட்சியின் ஒவ்வொரு துளியிலும் பிரதிபலிப்பதாக பக்தர்கள் ஆனந்தத்துடன் கூறி கூறினர். இந்த காெண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீசத்ய சாய்பாபா நினைவு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளது. வரும் 19ம் தேதி பிரதமர் மோடி, 22ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் 23ம் தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புட்டபர்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து புட்டபர்த்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.