பதிவு செய்த நாள்
16
டிச
2025
10:12
கலியுக தெய்வம், கண்கண்ட தெய்வம், நடமாடும் தெய்வம் என போற்றப்படுபவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற மஹாபெரியவர். காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான இவரது பிருந்தாவனம்(சமாதி) காஞ்சி சங்கர மடத்தில் உள்ளது. தன் 13ம் வயதில் பீடமேறிய மஹாபெரியவர் 100வது வயதில் ஸித்தி அடைந்தார். 87 ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்து நாடெங்கும் யாத்திரை செய்து சனாதன தர்மத்தைப் போதித்தார். அந்த மகான் ஸித்தியானது 1994ல். அவர் ஸித்தி அடைந்து 31 ஆண்டு ஆகி விட்டது. இந்த நேரத்தில், மகா பெரியவா என்ற தலைப்பில் தமிழில் 15 தொகுதி நுால்களை எழுதிய பி.சுவாமிநாதனை சந்தித்தோம்.
"எத்தனையோ சந்நியாசிகள் இருக்கும் போது, இவரைப் போல் ஒருவர் இல்லை என மஹாபெரியவரை கொண்டாடுவது ஏன்?"
"எத்தனையோ பூக்கள் உலகில் இருக்கும் போது பசுவான் கிருஷ்ணர், எனக்கு தாமரையை பிடிக்கும் என்கிறார். எத்தனையோ மரங்கள் இருந்தாலும் அரச மரத்தைப் பிடிக்கும் என்கிறார். எத்தனையோ நதிகள் இருந்தாலும், கங்கையை பிடிக்கும் என்கிறார். இப்போது கேட்டால், எத்தனையோ சந்நியாசிகள் இருந்தாலும் எனக்கு மஹாபெரியவரை பிடிக்கும் என்பார் பசுவான். எளிமை, கட்டுப்பாடு, மனஉறுதி என துறவின் அத்தனை அம்சமும் கொண்டவர் என்பதால் அவரைக் கொண்டாடுகிறோம்.
"மஹாபெரியவரின் உபதேசம், கருத்துக்கள் எதைப் பிரதிபலிக்கின்றன?"
"எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். இதுதான் அவரின் கொள்கை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு.
ஒரு உயிர் இறந்தால் அது முக்தி அடையும் அல்லது மீண்டும் பிறக்கும். ஆனால் மீண்டும் பிறப்பு என்பதே இருக்கக் கூடாது என்பதற்காகவே தர்ம வழியில் நம்மை நடக்கச் சொன்னார்.
நேர்மை, உண்மை நியாயத்துடன் நடப்பவர் லட்சத்தில் ஒருவர் வேண்டுமானால் இருக்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் மஹாபெரியவரின் உபதேசத்தை பின்பற்றினால் நிம்மதியாக வாழலாம். இப்படி ஒரு நபர் நினைத்தாலும் அது வெற்றியே. இதற்குத் தான் மஹாபெரியவர் பாடுபட்டார். நேர்மையுடன் பலரும் வாழ்கிறார்கள். அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை." "காஞ்சி மஹாபெரியவரை நீங்கள் நேரில் தரிசித்ததுண்டா?"
"எனக்கு நினைவு தெரிந்து இல்லை. குழந்தையாக இருந்த போது ஒருவேளை என் பெற்றோர் அழைத்துச் சென்றார்களா என தெரியவில்லை" மஹாபெரியவரை பார்க்காத நீங்கள் அவரைப் பற்றி எப்படி பேசவும், எழுதவும் முடிகிறது?" "பக்தி என்பது அனுபவிப்பது... பரவசப்படுவது... ஆன்மாவுக்கு இன்பம் தருவது. ஆதி சங்கரர் பற்றி இன்று பலர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். இவர்கள் ஆதிசங்கரரைத் தரிசித்ததில்லை. ஒருவரைப் பற்றி பேசவோ, எழுதவோ வேண்டும் என்றால் நேரில் பார்த்திருக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை. புரிதலும் தெளிதலும் இருந்தால் போதும்."
"ஆதிசங்கரர் மீது காஞ்சி மஹாபெரியவருக்கு எப்படிப்பட்ட பக்தி இருந்தது?"
"சனாதன தர்மமும், பக்தியும் செழித்ததற்கு காரணம் ஆதிசங்கரர் தான்! எல்லா கோயில்களிலும் ஆதிசங்கரர் சன்னதி அமைக்க மஹாபெரியவர் வலியுறுத்தினார். மஹாபெரியவரின் பிறந்த நட்சத்திரமான அனுஷத்தன்று நடக்கும் பூஜையில் தன் படம் ஆதிசங்கரருக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்பார்"
"இன்றைக்கு ஆதிசங்கரருக்குத் தனி கோயில் இல்லாத போது மஹாபெரியவருக்கு கட்டுகிறார்களே..."
"உண்மை தான். தனக்குக் கோயில் கட்டப்படுவதில் மஹாபெரியவருக்கு உடன்பாடு இல்லை. இருக்கும் பழைய, சிதிலமடைந்த கோயில்களை புதுப்பிக்க வேண்டும் என்றே அடிக்கடி குறிப்பிடுவார். அவரது ஆசியுடன் கட்டப்பட்ட ஒரே கோயில் காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபம் மட்டுமே.
தனக்கு வழிபாடு நடப்பதை அவர் விரும்பவில்லை என்பதற்கு சான்றாக ஒரு உதாரணம் சொல்கிறேன்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது சான்டூர் சமஸ்தானம். இங்கு 18 சித்தர்களுக்கும் கோயில் கட்ட விரும்பினார் சான்டூர் மகாராஜா. அதற்காக மஹாபெரியவரின் பக்தரான முத்தையா ஸ்தபதி மூலம் பணியைத் தொடங்கினார். அத்துடன் நிற்காமல், 19வது சித்தரான மஹாபெரியவருக்கும் ஒரு சிலை வடிக்க வேண்டும் என்றார். இது பற்றி மஹாபெரியவரிடம் அனுமதி பெறலாம் என ஸ்தபதி காஞ்சிபுரம் வந்த போது, "எனக்கு விக்ரஹம் வேண்டாம் என மறுத்தார் மஹாபெரியவர். அப்போது இதை செய்யாவிட்டால் தன் ஆன்மா சாந்தி அடையாது என்கிறார் சான்டூர் மகாராஜா என ஸ்தபதி இழுத்தார்.
அப்படியானால் ஒரு உருண்டைக் கல்லைத் தயார் செய். அதில் நான் இருப்பதாக சொல்லி கொடு என அனுப்பினார் மஹாபெரியவர்.
என் கழுத்தில் மாலை விழுமா... என்னைப் பாராட்டிப் பேசுவார்களா... என் காலில் விழுந்து வணங்குவார்களா? என சந்நியாசிகள் எதிர்பார்க்கும் இந்தக் காலத்தில், வாழும் தெய்வமான மஹாபெரியவரை எண்ணிப் பாருங்கள்"
"கடைசியாக ஏதாவது ஒரு மெசேஜ் மஹாபெரியவர் நமக்குச் சொன்னது..."
"பெரியவா... பதினெட்டு புராணங்களை படிச்சு முடிக்கணும்னா ஆயுசே போதாது போலிருக்கே. இதனோட சாராம்சத்தை சிம்பிளா சொல்லுங்களேன் எனக் கேட்டார் பக்தர் ஒருவர். அவருக்குச் சொன்னதுதான் நமக்கான மெசேஜ்... பதினெட்டு புராணங்களும் சொல்ற விஷயம் ஒண்ணு தான். ஒழுக்கமா வாழணும். சத்தியத்தைக் கடைப்பிடிக்கணும்... இதைச் செய்துட்டா போதும். பக்தி, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் போதும். மஹாபெரியவரின் அருள் நமக்கு கிடைத்து விடும்".