வல்லபை ஐயப்பன் கோயிலில் கொடியேற்ற விழா டிச.26, 27ல் ஆராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 05:12
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கி பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று சனிக்கிழமை தோறும் மாலையில் ஊஞ்சல் உற்ஸவம், எடைக்கு எடை பொருட்கள் நேர்த்திக்கடனாக வழங்கக்கூடிய துலாபாரம் நிகழ்ச்சியும் ரெகுநாதபுரம் கோயிலில் நடந்து வருகிறது. கோயில் முன்புறம் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை குருசாமி மோகன் சரணகோஷம் முழங்க கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக கணபதி ஹோமம் அஷ்ட அபிஷேகம் தீபாராதனைகள் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் பூதபலி சிறப்பு பூஜைகள் நடந்தது. டிச., 26 அதிகாலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனையும் மாலை 4:00 மணிக்கு பள்ளி வேட்டை புறப்பட்டு ரெகுநாதபுரம் நகர் வீதி உலா நடக்கிறது. இரவில் சயனக் கோலமும், மறுநாள் டிச., 27 காலையில் கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை 8:00 மணிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் வண்ணப் பொடிகள் பூசிக்கொண்டு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் பின்னர் கோயில் பின்புறம் உள்ள பஸ்மக்குளத்தில் உற்ஸவமூர்த்தி ஆராட்டு நிகழ்ச்சியும் மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 60 நாட்களும் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் நடந்து வருகிறது. இவ்விழாவில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.