கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் ராமாயண கண்காட்சி கூடம் மற்றும் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி கொண்ட 18 டன் எடையுள்ள ஆஞ்சநேயர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில் கல்வி, ஆன்மிகம் மற்றும் மருத்துவசேவைகள் செய்யப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திவிழாவினை ஒரு ஆண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விவேகானந்த கேந்திரா வளாகத்தின் முன்பகுதியில் அலைகூடம் அமைந்துள்ள இடத்தில் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய பிரமாண்டமான வடிவில் ராமாயண கண்காட்சி மற்றும் கண்காட்சி கூடத்தின் முன்பகுதியில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 27 அடி உயர 18 டன் எடைகொண்ட வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படவுள்ளது. மேலும், கண்காட்சி கூடத்தில் ராமாயண கதை நிகழ்வுகளை சித்தரிக்கும் 67 படக்குறிப்புகள் இடம்பெறுகிறது. இந்த படக்குறிப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் குறிப்புகள் இடம்பெறுகின்றது. 5 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள ராமாயண காட்சி கூடம் மற்றும் ஆஞ்சநேயர் சிலை ஆகியவற்றை ஓராண்டு காலத்தில் பணியை நிறைவு செய்ய விவேகானந்த கேந்திரம் முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு நடந்தது. காலை 5 மணிக்கு கணபதிஹோமமும் தொடர்ந்து கோபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா துவங்கியது. புனே ஆலந்திமகரிஷி வேத வியாசபாட சாலையை சேர்ந்த கோவிந்த தேவ் கிரிஜி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ராகேஷியாம்ஜிசாந்தக், இயக்குனர் நந்தகிஷோர், கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொதுசெயலாளர் பானுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.