பதிவு செய்த நாள்
05
ஜன
2013
10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழுதான தூண்களை அகற்றி விட்டு, புதிய தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, மின் அறுவை இயந்திரம் மூலம் கருங்கற்களை செதுக்கும் போது கிளம்பும் அதிகளவு தூசியால், கோயில் மாசடைகிறது. தூசியை கட்டுப்படுத்தவும், சிற்பிகளுக்கு மாஸ்க், கண்ணாடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தை அடுத்துள்ள மண்டபம், பொற்றாமரைக்குளத்தின் தெற்கு பகுதியின் மண்டபத்தின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது. அதைப் புதுப்பிக்கும் பணிக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பண்ருட்டியை சேர்ந்த ஸ்தபதி குமரகுரு தலைமையில், 25 சிற்பிகள் கற்தூண்களை செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வடக்காடி வீதி, தெற்காடி வீதிகளில் கற்தூண்களை மின் அறுவை இயந்திரம் மூலம் செதுக்கி வருகின்றனர்.
கோயிலை மாசுபடுத்தும் தூசி: தூண்களை செதுக்கும்போது கிளம்பும் அதிகளவு தூசி, புகை போல் பரவி கோபுரங்களையும், கோயிலையும் மாசடைய வைக்கிறது. அவ்வழியாக செல்லும் பக்தர்களின் கண்களில் கருங்கல் தூசிகள் விழுந்து சிரமம் அடைகின்றனர். கோபுரங்கள் மீதும், கோயிலுக்குள்ளும் தூசிகள் படிகின்றன.
மாசடைவதை தடுக்க ஏற்பாடு: மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தூண்களை செதுக்கும் பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் பந்தல் அமைக்கவும், சிற்பிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு மாஸ்க், கண்ணில் தூசி விழாமல் இருக்க கண்ணாடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி நடக்கும் பகுதியில் பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல பாதை அமைத்து கொடுக்கப்படும். தரையில் படிந்துள்ள தூசிகள், உடைந்த கற்கள் அகற்றப்படும், என்றார்.