பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை, முதுநிலை மற்றும் சிறப்பு கோவில்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும், "பாவை விழா நடத்தி, பரிசுகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 4ம் தேதி முதல், கோவில்களில், "பாவை விழா நடத்தப்பட்டு வருகிறது.தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 481 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள், ஆண்டு வருவாய் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.திருவெம்பாவை, திருப்பாவை பற்றி, வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில், முதல் கட்டமாக, 680 கோவில்களில், "பாவை விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, திருவெம்பாவை, திருப்பாவைக்கு கட்டுரை, ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கட்டுரை மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளில் முறையே, முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு தனித் தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன.வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கான பரிசுகளை, ஆளும் கட்சியை சார்ந்த உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டு வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மண்டல இணை கமிஷனர் ஒருவர் கூறியதாவது:இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 680 கோவில்களில் தற்போது, பாவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் விழாவுக்கான செலவை, கோவில் நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் பரிசையும், கோவில் நிர்வாகமே ஏற்கும். இதில், முதல் மூன்று பரிசுகள் கட்டாயம். அதற்கு மேல் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பரிசுகள் வழங்குவது குறித்து, கோவில் நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம்.ஆனால், மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிலையில், கோவில் நிர்வாகம், மாவட்ட கல்வித் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். இது பற்றி, கடந்த முறை நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், வாய்மொழியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.இந்த விழாக்களை, பொங்கல் பண்டிகைக்கு முன், ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.