பதிவு செய்த நாள்
12
ஜன
2013
03:01
மாசி வரை பொங்கல்: ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகைக்கு இருக்கும் வரவேற்பு, வேறு எந்தப்பண்டிக்கைக்கும் இருப்பது இல்லை. காரணம், அவை இரண்டிற்கு மட்டும் தான், தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்குமாம். பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு, நாம் தரும் முக்கியத்துவம் இதுதான். அதனால்தான், வீட்டு பொங்கல், மாட்டுப் பொங்கல், என தனித்தனியே பிரித்து, அவரவருக்குரிய நாளில் பொங்கல் கொண்டாடி முடிக்கிறோம். ஆனால் இன்றும், ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை, மாதக்கணக்கில் கொண்டாடப்படுகிறது, என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? வேறெங்கும் இல்லை, நம் அருகில் உள்ள தேனி மாவட்டத்தில்தான். சின்னமனூர் அருகே அய்யம்பட்டி; தொன்மையான ஜல்லிக்கட்டு கிராமம். மதுரை மாவட்டம் வெள்ளரூர்தான், இவர்களின் பூர்வீகம். 600 ஆண்டுகளுக்கு முன், அய்யம்பட்டியில் குடிபெயர்ந்த இவர்கள், தங்கள் குல தெய்வமான, ஏழைகாத்தம்மன் வல்லடிகார சுவாமிக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். தை பிறந்ததும், அவர்கள் மனதில் சந்தோஷமும் சேர்ந்து பிறந்து விடுகிறது. மாசி மாதம் வரை தொடரும், அவர்களின் பொங்கல் கொண்டாட்டமே, அதற்குக்காரணம்.
2 மாதம், அப்படி என்ன செய்வாங்க, என்கிறீர்களா? கேளுங்க, அந்த வினோத நடைமுறையை: பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக, புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கும், அதன் தொடர்ச்சியாக, மாசி மாதத்தின் முதல் அமாவாசையில், பாரிவேட்டை செல்வது வழக்கம். ஐந்து வயதைக் கடந்து ஆண்கள் அனைவரும், காலை 7 மணிக்கு ஆஜராவர். மேள, தாளத்துடன் ஊர்வலமாக, சின்னமனூரை அடுத்த வெள்ளையம்மாள்புரம் கரட்டுப்பகுதிக்குச் செல்வர். அங்கு சுவாமி வழிபாடு செய்தபின், பரிவேட்டை தொடங்கும். வேட்டை நாய்களுடன், கிராமமே பரபரப்பாய் செயல்படும் தருணம் அது. மதியம் வரை நடக்கும் அந்த வேட்டையில், பெரும்பாலும் முயல்களே சிக்கும். குறைந்தது, 20 முயல் வரை பிடிபடும். அவற்றுடன், ஊர்வலமாக ஊர் திரும்புவர். வேட்டையாடிய முயல்களை, கோயிலுக்கு பலி கொடுக்கும் பூஜாரி, முயலின் ஈரல், கால்களை சுவாமிக்கு படைக்கிறார். இறைச்சியை கூறு போட்டு, குடும்பம் வாரியாக பிரித்து தருவார். வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தால், சமீப காலங்களாக பாரி வேட்டை தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வழிபாடு நடத்துகின்றனர். பாரிவேட்டை முடிந்த அடுத்த 15 நாட்களுக்கு, தீவிர பவுர்ணமி விரதம் மேற்கொள்கின்றனர். அந்த 15 நாளில், உரல் மற்றும் கிரைண்டரில் மாவு அரைக்கக் கூடாது, மண் குழைக்க கூடாது, அசைவம் உண்ணக் கூடாது, போன்ற, பல கட்டுப்பாடுகள். அந்தச் சமயத்தில் இறப்பு ஏற்பட்டால், இறந்தவருக்கு கோடித் துணி எடுக்கக் கூடாது, மேளம் அடிக்கக் கூடாது, வெடி போடக் கூடாது, எண்ணெய் புழங்கக் கூடாது,. விரதம் முடிந்தபின், இறந்த வரின் வீட்டில் பொம்மை வைத்து, அதையே அவராகக் கருதி, இறந்த நாளில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்வர். பொம்மையை ஊர்வலமாக கொண்டு சென்று, சுடுகாட்டில் புதைப்பது வரை, கிராமமே கூடிச் செய்யும். விரதம் நிறைவு பெறும் நாளில், பகல் 12 மணி உச்சிவெயிலில் கிடா வெட்டி, கோயிலில் பொங்கல் வைத்து பொங்கல் விழா முடிவுக்கு வருகிறது.
கட்டுப்பாடுகள் கரடு, முரடாக இருந்தாலும், பாரம்பரியத்தை பரந்த மனதோடு தொடர்ந்து வரும் இவர்களை பாராட்டுவோம்!