பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரிநீர், மழைநீர் அறவேயின்றி பயிர் விளைச்சல் பாதித்ததால், நஷ்டத்தில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இனிக்கவில்லை. தமிழகத்தில், டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை, சம்பா சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் துவக்கினர். சில விவசாயிகள் மட்டும் காவிரி நீர் வருமா?, மழை பெய்யுமா? எனும் சந்தேகத்தில் நிலங்களை தரிசாக போட்டு வைத்தனர். இந்நிலையில், தமிழகத்தின் பங்களிப்பு காவிரி நீர், 48 டி.எம்.சி., வழங்காமல் கர்நாடகா அரசு முழுமையாக கைவிரித்து, நட்டாற்றில் தவிக்க விட்டது. ஆனால், தமிழக அரசு பகீரத முயற்சியால், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய தரப்பிலிருந்து கடும் கண்டனத்துக்கு, கர்நாடகா அரசு ஆளானது. ஆனாலும் காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை.தமிழக அரசின் நடவடிக்கையால் கடந்தாண்டு அக்டோபர் மாதம், 5ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையில், பாசன தண்ணீர் தேவையை நேரில் ஆய்வு செய்தனர். ஆனாலும் பலனில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி, நாசமாகின.காவிரி நீர் எதிர்பார்ப்பில் இருந்த டெல்டா விவசாயிகளும், விவசாய அமைப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளானதால், பண்டிகைகளை புறக்கணிப்பதாக, அறிவித்தனர்.நெல் சாகுபடியில், விளைச்சலின்றி ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவழித்து, நஷ்டமடைந்துள்ளனர். இதனால், 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் முன்வைத்து காத்திருக்கின்றனர். குடும்பம் நடத்தக்கூட, கையில் பணமில்லாத நிலையில் உள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டவில்லை.
பொங்கல் சம்பிரதாயங்கள் நடப்பாண்டு களைகட்டாதது பற்றி, தஞ்சை விவசாயிகள் கோவிந்தராஜ், ஜீவக்குமார் கூறியதாவது:குறுவை, சம்பா பருவ நெற்பயிர் விதைப்பு பணிக்கு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவாகி விட்டது. ஆனால், பயிர் விளைச்சலோ அடியோடு இல்லை. அதனால், கையிருப்பு பணமின்றி, பொங்கலை ஆடம்பரமின்றி கொண்டாடுகிறோம்.கடந்த, 10, 11ம் தேதிகளில் நிதித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவினர், முதல்வருக்கு உரிய பரிந்துரையை வழங்கி, ஏக்கருக்கு முழு நிவாரணம், 25 ஆயிரம் ரூபாயை பெற்றுத்தர வேண்டும்; அப்போதுதான் டெல்டா விவசாயிகளுக்கு உண்மையான பொங்கல்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
* டெல்டாவில் களையிழந்த பொங்கல், வீடுகளில் முடங்கிய விவசாயிகள்:காவிரி நீர், மழை நீரின்றி நெல்விளைச்சலின்றி வறட்சியின் பிடியில் தவிக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்ட கிராமப்புற விவசாயிகள், ஆடம்பரமின்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடி, வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனால், நகரங்களில் கடைவீதிகள் களையிழந்து காணப்பட்டது. டெல்டா மாவட்ட நகரங்களில் மட்டுமே பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சம்பிரதாயத்துக்காக, பண்டிகையை கொண்டாடினர். இதனால், வழக்கமாக பொங்கல் பண்டிகை காலங்களில் கலகலவென இருக்கும் டெல்டா மாவட்டங்கள், இந்த ஆண்டு எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக காணப்பட்டது.விவசாயிகள் பொங்கல் பண்டிகை வீட்டில் சம்பிரதாயமாக கொண்டாடிவிட்டு, வழக்கமான உற்சாகமின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். வறட்சி காரணமாக, டெல்டா விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை இனிக்கவில்லை.