திருவண்ணாமலை பகவான் ரமணர் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சி இது. பழைய நுால்கள் சிலவற்றை அச்சடிக்க விரும்பினார் ரமணர். அதற்காக மூலநுால்களை படி(நகல்) எடுக்கும் பணியில் சீடர்கள் ஈடுபட்டனர். அப்போது ஆசிரமத்திற்கு வந்த பக்தர் ஒருவர் ஆர்வத்துடன் அந்த பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தான் படி எடுத்த பாடல்களை ரமணரின் பார்வைக்கு வைத்தார். அதில் தவறு இருப்பதைக் கண்ட ரமணர், ‘எதை படி எடுத்தீர்கள்’ எனக் கேட்டார். ஏற்கனவே ஒருவர் படி எடுத்த பாடலை பார்த்து எழுதியதாகச் சொன்னார் பக்தர். ஒரிஜினலைக் கொண்டு வரச் செய்து, அதில் இருந்த பிழைகளைச் சுட்டிக் காட்டினார் ரமணர். ‘எவ்வளவு கஷ்டப்பட்டு புத்தகம் அச்சிடுகிறோம். கவனமாக இருக்க வேண்டாமா... படிஎடுத்தல் என்பது ஒரு கலை. மூலநுாலில் இருந்து எடுத்து எழுதுவதே படி எடுத்தல். இனியாவது விழிப்புடன் இருங்கள்’ என அறிவுறுத்தினார் ரமணர். –லட்சுமி பாலசுப்ரமணியன்