பதிவு செய்த நாள்
07
ஏப்
2026
10:04
உடுப்பி மாவட்டம் மூடுகல்லு பகுதியில், ஸ்ரீ கேசவநாதேஸ்வரா கோவில் உள்ளது. இது, சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். சிவ பெருமான் ஸ்ரீ கேசவநாதேஸ்வரா வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவில் ஒரு குகை கோவிலாகும். இயற்கையாக அமைந்த குகைக்குள், லிங்க வடிவத்தில் மூலவர் காட்சி அளிக்கிறார்.
இந்த குகைக்குள் சில சமயங்களில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீரும் இருக்கும். இந்த தண்ணீரில் அழகாக நடந்து செல்லலாம். நீரினில் மீன்கள் நீந்தி செல்வதையும் பார்க்க முடியும். தெளிவான நீரில் மீன்கள் நீந்தி செல்வதை பார்க்க அழகாக இருக்கும். இந்த மீன்களுக்கு பக்தர்கள் உணவு அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் மீன்களுக்கு உணவு வழங்குவதை நேர்த்திக்கடனாகவே கருதுகின்றனர்.
மன அழுத்தம் குறையும் இக்கோவிலை சுற்றி, பெரிய அளவிலான பாறைகள் காணப்படும். இக்கோவிலினுள் மின்சார வசதி எதுவும் இல்லை.கோவில் தினமும் காலை, 6:00 முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு ஜாதக ரீதியான தோஷங்களை தீர்க்க சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானாகவே மன அழுத்தம் குறைகிறது.
இதற்கு, இக்கோவில் அமைந்துள்ள சூழலும் முக்கிய காரணம். மூலவருக்கு பால், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இக்கோவில் இறைநம்பிக்கையுடன், இயற்கையின் மீதான முக்கியத்துவத்தையும் உணர வைக்கும். இக்கோவில், உடுப்பியில் இருந்து 74 கி.மீ., தொலைவிலும், சித்தாபுராவில் இருந்து, 21 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.
சாலை வழியாகவே கோவிலை எளிதில் அடையலாம். இங்கு வருவோர் அருகிலுள்ள கவலேதுர்கா கோட்டை, சித்தாபுரா நீர்வீழ்ச்சி ஆகியவற்றையும் பார்த்துவிட்டு செல்லலாம்.
எப்படி செல்வது?பஸ்: முதலில் உடுப்பி பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: முதலில் உடுப்பி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை அடையலாம்.
விமானம்: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம்கோவிலை அடையலாம்.