ராமேஸ்வரம்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். எதிர்க்கட்சிக்கு ராஜயோகம் ஏற்படும். ஆளும்கட்சி மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் குருக்கள் பஞ்சாங்கம் வாசிப்பின்போது தெரிவித்தார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : உலக நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் வியக்கும் வகையில் இந்திய பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வளர்ச்சி அடையும். கார்கள் உற்பத்தி அதிகரித்து விலை குறையும். புயல் உருவாகி கனமழை பெய்து நீர்நிலைகள் பெருகும். விவசாயத்தில் மஞ்சள், பால், வெங்காயம், தக்காளி, பூண்டு உற்பத்தி அதிகரிக்கும் விலை குறையும். ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, உள்ளிட்ட சில வட மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும். மீண்டும் பெரும் தொற்று நோய் பரவி மக்கள் பாதிப்படுவார்கள். எல்லை ஓரத்தில் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு நடக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் ஏற்படும். ஆளும் கட்சியில் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரிவை சந்திப்பார்கள். சாலை விபத்து அதிகரிக்கும். ஈரான், இஸ்ரேல் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என தெரிவித்தார். இதன்பிறகு சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பேஷ்கார் கமலநாதன், வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.