பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
பள்ளிப்பட்டு:நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, இம்மாதம், 23ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் கிரிராஜா கன்னிகா பரமேஸ்வரி சமேத கங்காதரேஸ்வரர் கோவில் உள்ளது.இது நாயக்கர் வம்சத்தில் குறுநில மன்னர்களாக இருந்த ஆந்திராவில் உள்ள கார்வேட்நகரத்தை தலைமை இடமாக வைத்து, ஆட்சி செய்த கார்வேட்நகர ராஜா காலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இதற்கான கல்வெட்டு தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு, கொடி மரத்தின் அடியில் பதிக்கப்பட்டு இருந்தது.தற்போது, அந்த கல்வெட்டு அங்கிருந்து அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்து, கோவில் வளாகத்தில் இருந்த சுவாமி சிலைகள், சில உடைந்து போயின.பழமை வாய்ந்த இக்கோவில் சில மாதங்களுக்கு முன், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்டது. கோவில் கோபுரங்கள் கட்டப்பட்டு, 18 அடி உயரத்தில் கல்தூண் கொடி மரம் நிறுவப்பட்டது.புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இம்மாதம், 23ம் தேதி நடைபெற உள்ளது.