பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், காணும் பொங்கலையொட்டி பாரிவேட்டை உற்சவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் பழமையான ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் காணும்பொங்கல் அன்று, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், பாரிவேட்டை உற்சவம் நடத்தப்படுகிறது. வழக்கம்போல், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி உற்சவ மூர்த்திகள், கோவிலிருந்து, புறப்பட்டு வி.ஆர்.பி., சத்திரம் பாரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, வாத்திய மேளங்களுடன், வான வேடிக்கை முழங்க பாரிவேட்டை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை, காந்திரோடு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக, கோவிலை சென்றடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். பாரிவேட்டை உற்சவத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் சன்னிதி தெருவில், உற்சவ குழுவினர் சார்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.