ஏர்வாடி சந்தனக்கூடு விழா கொடியேற்றம்: ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 12:04
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில், 852ம் ஆண்டு மத நல்லிணக்க உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா உலக பிரசித்தி பெற்றது. நேற்று நடந்த இவ்விழா கொடியேற்றத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏப்., 18 அன்று தர்கா ஷெரீப் மண்டபத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலீது எனும் (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை தர்கா முன்புறமுள்ள கொடி மர பீடத்தில் 42 அடி உயரம் உள்ள அடிமரம் நடப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் வந்தது. அதனுடன் மேளதாளங்கள் முழங்க, நாட்டிய குதிரைகள் நடனமாட, யானை மீது பச்சை வண்ண பிறைக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இரண்டு கி.மீ., ஊர்வலம் வந்து ஏர்வாடி தர்கா வளாகத்தை அடைந்தது. அங்கு தர்காவை மூன்று முறை யானை மீது வலம் வந்தது. மாலை 6:45 மணிக்கு வாசனை திரவியங்கள் பூசப்பட்டு, உயரமான கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் தலைமையில் உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது. வாண வேடிக்கைகள் நடந்தன. விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். மே 10 மாலை 5:00 மணி முதல் சந்தனக்கூடு விழா துவங்கி மறுநாள் அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 18ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம், துணைத்தலைவர் முகமது சுல்தான், செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் தர்கா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.