பதிவு செய்த நாள்
19
ஜன
2013
11:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. "திருநெல்வேலி என பெயர் வர காரணமாக இருந்த புராண வரலாற்றை விளக்கும் பிரசித்தி பெற்ற "நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா காலத்தில் கோலாகலமாக நடக்கும்.பழங்காலத்தில் வேதபட்டர் சிவபெருமானுக்கு அமுது படைக்க நெல்மணிகளை காய வைத்து விட்டு தாமிரபரணியில் குளிக்க சென்றார். அப்போது திடீரென மழை பெய்தது. இறைவனுக்கு படைப்பதற்கு காய வைத்திருந்த நெல்மணிகள் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்குமோ என மனம் கலங்கி வேதபட்டர் நெல்மணிகள் காய வைத்திருந்த இடத்திற்கு ஓடோடி வந்து பார்த்தார்.அப்போது நெல்மணிகள் காய வைக்கப்பட்ட இடம் மட்டும் தண்ணீரில் நனையாமல் இருந்தது. நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் புரிந்த திருவிளையாடலை எண்ணி வேதபட்டர் மெய்சிலிர்த்து நின்றார். இதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் "நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் விழா நடக்கிறது. காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4ம் திருநாளான 21ம் தேதி மதியம் நெல்லுக்கு வேலியிட்ட விழா, இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.தைப்பூச திருவிழா27ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது.
சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தை அடைகின்றனர். அங்கு தீர்த்தவாரி, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், இதர மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரதவீதிகள் வழியே கோயிலை வந்தடைகின்றனர். 28ம் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 29ம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பக்குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், பணியாளர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்துள்ளனர்.