பதிவு செய்த நாள்
07
ஜூன்
2026
11:06
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஒரு வைணவக் கோவில், சிங்காநல்லுாரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில். ஸ்ரீ த்ரி விக்கிரமநாராயண சுவாமி திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கருவறையில், மூலவர், உலகளந்த பெருமாள் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணை நோக்கியும், எட்டு கரங்களுடனும் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு கரத்திலும், ஒவ்வொரு ஆயுதங்கள் உள்ளன. சுதர்சன சக்கரம், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு, சாரங்கம் எனும் தனுசு, கவ்போதகி என்ற கதை, சத்சந்திரம் என்ற கேடயம், வித்யாதரம் என்ற வாள், அக்சயங்களாக, இரண்டு அம்பொறா பொதிகளை தாங்கி நிற்கிறார் பெருமாள்.
சிலையின் மொத்த எடையும், ஒற்றைக் காலின் பலத்திலேயே தாங்கி நிற்பது என்பது, சிற்பியின் திறமையையும், பக்தியையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. உற்சவரும், பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளார். பெருமாளின் திருமேனி, பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டது தான் தனிச்சிறப்பு. இந்த பஞ்சலோக சிலை, கை தேர்ந்த பல்லவர்களால் உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே அரிதாக இந்த சிலை கருதப்படுகிறது. கோவை மாவட்டத்தில், திவ்யதேசம் என்ற சிறப்பை பெற்றுள்ளது, இக்கோவில்.
விஸ்வரூப தரிசனம்
மகாபலி சக்ரவர்த்தியின் அகந்தையை அடக்க விஸ்வரூபம் எடுத்த பெருமாள், ஒரு காலால் பூமியையும், மறு காலால் விண்ணையும் அளந்த கோலத்தை இங்கே தரிசிக்கலாம்.
மூலவர்: உலகளந்த பெருமாள்.
உற்சவர்: வரதராஜ பெருமாள்.
உற்சவர் தாயார்: ஸ்ரீ தேவி, பூதேவி.
தல விருட்சம்: வன்னிமரம்
ஆகமம்:பஞ்சராத்ரம் முறை.
தரிசன நேரம்
காலை 5:00 மணி முதல் காலை 10:30 மணி
மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி தினசரி பூஜைகளை
தினசரி வைஷ்ணவ ஐயங்கார் பூசாரிகள் குடும்பத்தினர், ஏழு தலைமுறைகளாக கவனித்து வருகின்றனர்.
சன்னதிகள்
மகாலட்சுமி, ராமானுஜர், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் பிரசன்ன விநாயகர் சன்னதிகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில், பிரசன்ன விநாயகர் சன்னதி மட்டும், கிழக்கு திசை நோக்கியும், மற்ற சன்னதிகள், வடக்குத் திசை நோக்கியும் அமைந்துள்ளன.