வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய வென்று பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் அந்தியம் போதிலரியுருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதமே
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
அல்வழக்கு ஒன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்துார் விட்டுசித்தன் விரும்பியசொல் நல்லாண்டென்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே.