பதிவு செய்த நாள்
28
ஜூலை
2026
09:07
துமகூரின் பாவகடா தாலுகா, நாகலமடிகே கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் சுக்கிர தோஷம், அனைத்து நாக தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், பாவகடாவில் வாழ்ந்த அன்னம்பட்டா என்பவர் கனவில் தோன்றிய சுப்பிரமணிய சுவாமி, பினாகினி ஆற்றங்கரையில் தனது சிலை இருப்பதாக கூறினார். ஆற்றங்கரையில் நிலத்தை உழுத போது, ஒரு பாறை மீது செதுக்கப்பட்ட ஏழு தலை நாக வடிவிலான சுப்பிரமணிய சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
தெலுங்கில், ‘நாகலு’ என்றால் பாம்பு, ‘மடகா’ என்றால் ‘உழுதல்’ என்று பெயர். பாம்புக்காக நிலத்தை உழுத இடம் என்பதால் நாகலமடகா என்று அழைக்கப்பட்டது. பின் நாளில், ‘நாகலமடிகே’ என்று மாறி போனது. வனவாசத்தின் போது ராமர், சீதை, லட்சுமண் ஆகியோர் பினாகினி ஆற்றங்கரையில் தங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
கருவறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சிலை 2 அடி உயரம் 9 அங்குல அகலத்தில் உள்ளது. பாறையின் மீது இரண்டு சுருள்களாக உடல் சுருட்டப்பட்ட நிலையில், ஏழு தலை நாகமாக நின்ற கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குக்கே சுப்பிரமணியா கோவிலை போன்று இங்கும் சர்ப்ப சமஸ்காரம், ஆஷ்லேஷ பலி, நாக பிரதிஷ்டை, நாகதோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் சுப்பிரமணிய சஷ்டி அன்று தேர் திருவிழா நடக்கிறது. தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும்; மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சஷ்டி, கிருத்திகை இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.