பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும், குடமுழுக்கு திருப்பணிகளை, இந்து சமய அறநிலைய துறை ஆணையர், நேற்று மாலை, ஆய்வு செய்தார்.
ஆய்வு, உத்தரவு: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதில், கடந்த முன்று ஆண்டுகளாக, குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை, நேற்று மாலை, 5 மணியளவில், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தனபாலன், ஆய்வு செய்தார். இதில், கோவிலின் கோபுர பகுதிகளில், நடைபெற்று வரும் பணிகளை, நேரில் சென்று பார்வையிட்டார். மலைகோவில் கோபுரத்தில் பூசப்பட்டுள்ள, (சுமோ கிரே)வர்ணத்தை அடிவார கோவில் கோபுரங்களில் பூசுமாறும், வடக்கு ராஜ கோபுரத்தின் பகுதியில், கோவிலின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள, நந்தவனத்தை புதுபிக்குமாறும், வரும் ஏப்ரல் மாதத்தில், திருப்பணிகளை முடிக்கும் அளவில், பணிகளை துரிதப்படுத்தமாறும், கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார். மேலும், பக்தர்கள் தங்களின், காணிக்கைகளை உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், கோவில் திருப்பணிகளுக்காக, நிதி வழங்கும் நன் கொடைதாரர்கள், கோவில் நிர்வாக அதிகாரியிடம் நேரில் செலுத்தி, அரசு முத்திரையுடன் கூடிய, உரிய ரசீதை பெற்றுகொள்ள வேண்டும் என்றும், அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, மலை கோவிலையும் ஆணையர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆணையர் ராஜா மற்றும் இணை ஆணையர் செந்தில் வேலன், அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.
பக்தர்கள் வருத்தம்: இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், ""பெயரளவிற்கு மட்டுமே நடந்த, இந்த ஆய்வின் மூலம், கோவில் நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடுகளை ஆணையர் அறிந்து கொள்ள, வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவில் நிர்வாகத்தின் முறையற்ற செயல்களை, ஆணையரின் கவனத்திற்கு, கொண்டு செல்லவும், எங்களால் முடியவில்லை, என்றனர்.