பதிவு செய்த நாள்
06
அக்
2026
01:10
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்தனி சிறப்புகள் கொண்டவை; வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய கோவில்களில் ஐஹொளேவில் உள்ள துர்கா கோவிலும் ஒன்றாகும்.
பாகல்கோட் மாவட்டம், அமீன்கடா நகரின் ஐஹொளேவில் துர்கா கோவில் அமைந்துள்ளது. இது, 1,500 ஆண்டுகள் பழமையானது. சாளுக்கிய மன்னர்கள் கட்டியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இது, துர்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோவில் அல்ல. ஆனால், இங்கு துர்கையம்மன், மஹிஷாசுரமர்த்தனி வடிவத்தில் குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அழகான துர்கை விக்ரகங்களை காணலாம்.
கோவிலின் சிறப்பை அறிந்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இங்குள்ள துர்கையை தரிசனம் செய்தால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், பனி போல விலகும் என்பது ஐதீகம். மனதில் தைரியம் ஏற்படும். திருமண வரம் கிடைக்கும்.
கோவில் கட்டட வடிவமைப்பு, மிகவும் அற்புதமாக உள்ளது. இன்றைய இன்ஜினியர்களுக்கு சவால் விடும் அளவுக்கு வலுவாக உள்ளது. சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
துர்கை கோவிலில், தினமும் அதிசய சம்பவம் நடக்கிறது. தினமும் காலை 7:10 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 50 நிமிடங்கள் வரை, சூரியனின் கதிர்கள் நேரடியாக மூலஸ்தானத்தின் மீது படிகிறது.
முன்னொரு காலத்தில், இந்த கோவில் சூரிய கோவிலாக இருந்தது. நாளடைவில் துர்கை கோவில் என, மாறியதாம்.
அப்போதிருந்தே இந்த அதிசயம் நிகழ்கிறது. காலை நேரத்தில் வந்தால், இதை காணலாம்.
பாகல்கோட்டின் ஐஹொளே துர்கா கோவிலுக்கு வர, போக்குவரத்து வசதி ஏராளம் உள்ளது. அரசு பஸ்கள், ரயில்கள் வசதி உள்ளது. தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. நவராத்திரி நேரத்தில் தரிசிக்க வேண்டிய கோவில்களில், இதுவும் ஒன்றாகும்.