ஒரே மேடையில் மூன்று தலைமுறையினர் நிகழ்த்திய புல்லாங்குழல் கச்சேரி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 03:10
பாலக்காடு: பாலக்காடு கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி கோவிலில் நவராத்திரி இசை விழாவை முன்னிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து வழங்கிய புல்லாங்குழல் இசைக் கச்சேரி பக்தர்களையும் இசைப் பிரியர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கேரளாவிலும் பிற மாநிலங்களிலும் புல்லாங்குழல், நாதஸ்வரம் இசையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பிரபல நாதஸ்வர வித்வான் பல்லாவூர் கிருஷ்ணன்குட்டி. இவர் கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி கோவிலில் சுமார் 40 ஆண்டுகள் நாதஸ்வர வித்வானாகப் பணியாற்றியவர். இவரது மகனான ராஜேஷ், குஜராத்தில் உள்ள பிரபல நாட்டிய மேதை மல்லிகா சாராபாயின் ‘தர்பணா’ கலை அகாடமியில் பல ஆண்டுகள் புல்லாங்குழல் கலைஞராகப் பணியாற்றியவர். தந்தையின் இசைப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, கடந்த 15 ஆண்டுகளாக இவர் ரமூர் பகவதி கோவிலில் நாதஸ்வரக் கலைஞராகத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். இவரது மகன் அனிருத், பாலக்காடு பிக் பஜார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நவராத்திரி உற்சவத்தையொட்டி பல்லாவூர் கிருஷ்ணன்குட்டி, தனது சீடர்களான மகன் ராஜேஷ் மற்றும் பேரன் அனிருத் ஆகியோருடன் இணைந்து ஒரே மேடையில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இவ்விழாவில் பக்கவாத்தியக் கலைஞர்களாக கல்லேக்குளங்கரை உன்னிகிருஷ்ணன் (மிருதங்கம்) மற்றும் சுரேஷ் அம்பாடி (வயலின்) ஆகியோர் பங்கேற்றனர். மூன்று தலைமுறையினர் ஒன்றாக இணைந்து இசை மழையைப் பொழிந்த இந்த அரிய நிகழ்வு, கூடியிருந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.