பதிவு செய்த நாள்
02
மார்
2013
10:03
மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தை அமைப்பு ரீதியாகவும், தமிழ் பண்பாடு மற்றும் கலை அடிப்படையில் உருவாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, தமிழ் கலாசாரத்துடன் இணைந்து புது வடிவங்களை தயார் செய்ய, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. உலக தமிழ் சங்கம் 1986ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டது. அவருடைய கனவு திட்டமான, உலக தமிழ் சங்கம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், உலக தமிழக சங்கத்துக்கு உயிர் கொடுத்த, முதல்வர் ஜெயலலிதா, மதுரை கலெக்டர் அலுவலகத்தில், சங்க அலுவலகம் இயங்க, 2012 ஜூலை 12ம் தேதி உத்தரவிட்டார். மேலும், சங்கத்தின் தனி அலுலராக, தமிழ் வளர்ச்சித் துறையில், துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி நியமிக்கப்பட்டார். அலுவலக நிர்வாக செயல்பாட்டுக்காக, ஏழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், உலக தமிழ் சங்கத்துக்கு, புதிய கட்டடம் கட்ட, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகரின் மைய பகுதியில், 14.5 ஏக்கர் பரப்பில் உலக தமிழ் சங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக தமிழக சங்கத்தின் புதிய கட்டடம் தமிழ் கலாசாரம், பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைய, கட்ட வடிவமைப்புகள் இருக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, 25 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இதனடிப்படையில், கட்டட வடிவமைப்பைத் தயார் செய்ய, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், உலக தமிழ் சங்க தனி அலுவலர், இந்திய தொழில்நுட்ப நிலைய இயக்குனர் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மார்ச், 27ம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படுகிறது. இதில், கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்படும். இதன்பின், கட்டுமான பணிகள் துவங்கும் என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -