பதிவு செய்த நாள்
02
மார்
2013
01:03
சுற்றுலா என்றால், அதில் குதூகலம் கட்டாயம் இருக்க வேண்டும். அதே சுற்றுலா பல பரிமாணங்களை தந்தால் எப்படி இருக்கும்? அதற்கு நம்மூர் அருகே இருக்கும் ராமேஸ்வரம் தான், பொருத்தமான இடம். ஆன்மிகம், அழகு, இயற்கை, அதிசயங்கள், அனைத்தையும் சுமந்து நிற்கும், நடுத்தரவாசிகளின் ஐ கிளாஸ் சுற்றுலாத்தலம். கடலோரத்தில், காணக்கிடைக்காத பல சிறப்பிடங்களை கொண்டது, ராமேஸ்வரம் தீவு.மதுரை-ராமநாதபுரம் 113 கி.மீ., தூரம்; ராமநாதபுரம்-ராமேஸ்வரம் 57 கி.மீ., மதுரையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு நேரடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை-ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் உண்டு. வழியிலேயே, ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் இந்திரா பாலத்தையும், ரயில் பாலத்தையும் பயணத்தின் போதே, பார்வையிட்டு ரசிக்கலாம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சிவதலங்களில் முக்கிய தலம். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினால், தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். ராமேஸ்வரத்திலிருந்து 16 கி.மீ., தொலைவில், பாம்பன் குந்துகாலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. சிகாகோ பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய விவேகானந்தர், முதன்முதலில் தடம் பதித்த பகுதி; நினைவு மண்டபத்தில், அதற்கான ஆதாரங்கள், விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், 20 அடி நீள டால்பின் உள்ளிட்ட கடல் சார் உயிரினங்களின் வடிவில் வைக்கப்பட்டுள்ள சறுக்கு விளையாட்டுகள், குழந்தைகளை கவரும். ராமேஸ்வரம்-குந்துகால் இடையே, தினமும் இரண்டு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோவில் செல்ல ரூ.300 ஆகும். ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம், 2 கி.மீ., தொலைவில் உள்ள கெந்தமாதனபர்வதம், 12 கி.மீ., தொலைவில் உள்ள கோதண்டராமர் கோயில் பகுதிகளுக்கு செல்ல பேக்கிங் கட்டணமாக, ஆட்டோக்கள் ரூ.300 முதல் ரூ.350 வசூலிக்கின்றன. அக்னி தீர்த்த கடலில் இருந்து ரூ.60க்கு படகு சவாரி செய்யலாம். சுமார் 45 நிமிடம் தொடரும் சவாரியில், கடலோர அழகை ரசிக்கலாம். முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை செல்ல பேக்கிங் கட்டணமாக, ஜீப்பிற்கு ரூ.800; வேன் சர்வீஸ் பயணத்தை விரும்பினால், நபர் ஒருவருக்கு ரூ.100. கடலோரக்கவிதைகள் பாட, மண்டபம் பீச் போகலாம். தலைக்கு ரூ.5 தான்; அங்கிருந்த படி ரூ.30க்கு படகு சவாரியும் செய்யலாம்.கடல் சார்ந்த அழகை லோ பட்ஜெட்டில் ரசிக்க, ராமேஸ்வரம் சரியான தேர்வு. ஏன் இன்னும் சிந்தனை, சீக்கிரம் கிளம்புங்க, ஜாலியா போயிட்டு வாங்க!